அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, April 16, 2011

போர்க்குற்றம்


ஒருபக்கம் ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மௌனம் : மறுபக்கம் வரிசையாக அடுக்கப்படும் போர்க்குற்ற ஆதாரங்கள்!

AddThis Social Bookmark Button
இறுதியுத்தம் தொடர்பான, ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட போதும் பொதுமக்களுக்கு
பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது மனித உரிமை அமைப்புக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை தன்னிச்சையாக திரட்டி பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துவருகின்றன!

வி.புலிகளின் அரசியல்துறை, மற்றும் சமாதான செயலக பொறுப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள், தற்போது வெளியாகியிருக்கும் செய்மதி புகைப்படங்கள் என்பன அந்தவகையில் வெளிவந்த ஆதாரங்கள் ஆகும்.

நேற்று, சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் இளைஞர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர்.மனோகரன் இப்படுகொலைகளுக்கு இலங்கை இராணுவமே காரணம் என தெரிவித்திருந்தார்.

இப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தெரிவித்து 55,000 மக்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்ட டாக்டர் மனோகரன் அதனையும் ஐ.நாவில் சமர்ப்பித்திருந்தார்.
(இவ்வீடியோ தொகுப்பினை பார்க்கும் போது, இத் தந்தையின் கண்ணீருடனான கோரிக்கையை வலுப்படுத்த தோன்றுகிறதா?)
ஐ.நா நிபுணர் குழு தயாரித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை  மக்களிடம் பகிரங்கப்படுத்துமாறு நீங்களும் கோரலாம்.
'சிறிலங்காவில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரம் மக்கள் காணாமல் போயுள்ளனர். அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. குற்றவாளிகள் மட்டும் இன்னமும் தண்டிக்கப்படவில்லை'  என அனைத்துலக மன்னிப்பு சபையின் சிறிலங்கா தொடர்பான பிரதிநிதி போஸரும் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினரால் வன்னி மக்கள் மீது, நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மற்றுமொரு செய்மதி ஆதாரத்தை, த கிறிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் எனும் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இந்த செய்மதி படங்களின் மூலம் பொதுமக்களின் சடலங்களை தெளிவாக அவதானிக்க முடியவில்லை என்ற போதும், தமிழீழ வி.புலிகளின் மயானங்கள், பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மீது  இலங்கை படையினர் தாக்குதல் நடத்தியமையை தெளிவாக அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க வாஷிங்டனில் அமைந்துள்ள AAAS எனப்படும் American Association for the Advancement of science  நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளரான புரொம்லி என்பவர், இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது செய்மதிகளின் மூலம் யுத்த நிலவரங்களை சேகரித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியாக நம்புவதாகவும் புரோம்லி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு இதனை முற்றாக நிராகரித்துள்ள நிலையில், புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என த கிறிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் இணையத்தளம் அறிவித்துள்ளது.

சுமார் 450 மைல் உயரத்திலிருந்து இக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த செய்மதிகள் ஏற்கனவே கர்கிஸ்தான், மியன்மார், வடகொரியா, எதியோப்பியா கொங்கோ ஆகிய நாடுகளை சில தேவைகளுக்காக இரகசியமாக அவதானித்து வந்தது.

கடந்த வருடம் மெக்ஸிகோ எண்ணெய்க்கசிவு ஏற்பட்ட போது அதனையும் படம்பிடித்திருந்தது.
இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற கருத்துப்பட்டறையில், அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி கருண்யன் அருள்நாதன் ஆற்றிய உரை ஒன்றில்

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சிறீலங்கா அரசின் தடை முகாம்களில் இருந்த 13,130 பேர் காணாமல்போயுள்ளதாக புள்ளிவிபரங்களுடன் அறிவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,000 தமிழ் மக்களும், மே மாதம் 9 ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரையிலும் 25,000 தமிழ் மக்களுக்கு கொல்லப்பட்டுள்ளதாகவும் அவருடைய தகவல்கள் கூறுகின்றன.

வவுனியா தடுப்பு முகாமில்


வவுனியா தடுப்பு முகாமில் உள்ள வி.புலிகளின் போராளிகள் பட்டியல் நாளை வெளியீடு?


வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வி.புலிகளின் முன்னாள் போராளிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை சிறிலங்கா அரசு நாளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பில் அரசாங்கத்தினதும் - தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பிரதிநிதிகள் கடந்த 7ம் திகதி கொழும்பில் கூடி ஆராய்ந்ததை அடுத்து, நாளை வவுனியாவில் வைத்து, இவ் அறிக்கை சிறிலங்கா அரசினால் த.தே.கூ உறுப்பினர்களுக்கு கையளிக்கப்படவிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தரப்பின் சார்பில் வாஸ் குணவர்த்தன சமர்ப்பிக்கவுள்ளதுடன், அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டு, தம்மிடம் இருக்கும் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அரசிடம் சரணடைந்த புலிகளின் சிரேஷ்ட்ட தலைவர்களின் விபரங்கள், இப்பட்டியலில் உள்ளதா என்பது நாளை தெரியவரலாம் என கருதப்படுகிறது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட வி.புலிகளின் முன்னாள் போராளிகள் பலர், இராணுவ புலனாய்வு நடவடிக்கைக்கு உதவுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுவிப்புக்கு பின்னரான கண்காணிப்பு என்ற போர்வையில், அடிக்கடி கைத்தொலைபேசிகளில் தொடர்புகொள்ளும் இராணுவத்தினர், தமது உள தேவைகளுக்கு, இவ்வாறான முன்னாள் போராளிகளை பயன்படுத்த முயற்சிப்பதால் அவர்கள் பலர் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வாளர்களின் தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்ப்பதோ, அவர்கள் கேட்பதை செய்து கொடுப்பதற்குத் தவறுவதோ தமக்கு உயிராபத்தை ஏற்படுத்தி விடக் கூடும் என்ற அச்சமும் முன்னாள் போராளிகளிடம் காணப்படுகிறது.

அதேநேரம் அவர்கள் கேட்கும் உளவுத்தகவல்களை பெற்றுக் கொடுக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த ஆயுதப் படைகளுடனும் தொடர்புகளைப் பேண எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் என்ன செய்ய, நான் விரும்புவது நடக்கவில்லை. நாட்டை விட்டு ஓடிவிட்டால் போதும் போல் உள்ளது என விடுவிக்கப்பட்ட போராளி ஒருவர் தம்மை போன்றோருக்கு நேர்ந்துள்ள கதியை கூறுகின்றார்.

போர்க்குற்றம்


போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை பதுங்குகிறது : ஐ.நா பாயுமா?

AddThis Social Bookmark Button
ஐ.நாவின் நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டு, பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட, இலங்கை போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கை, விரைவில், பகிரங்கப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை அரசுக்கு மட்டும் பிரதியொன்று அனுப்பி வைக்கப்படும். பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த படாது என ஐ.நாவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்,  இவ்வாறு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரகசிய அறிக்கையில், இலங்கை அரசுக்கு பாதகமான பகுதிகள் மட்டும் இலங்கை உள்நாட்டு ஊடகமான தி ஐலண்ட் இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமிட்ட செயல் ஐ.நாவுக்கு வருத்தமளிப்பதாகவும், இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இதனை பகிரங்கப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இவ் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசுக்கு பதில் அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு ஊடகங்கள் மூலம் கசிந்திருந்த நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

1) எறிகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தல்.

2) வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியமை.

3) மனிதாபிமான உதவிகளை மறுத்தமை,

4) இடம்பெயர் மக்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள் உள்ளிட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியமை,

5) யுத்த வலயத்திற்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல்

ஆகிய ஐந்து பிரதான குற்றச் செயல்களில் இலங்கைப் அரசாங்கம் ஈடுபட்டதாக நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.

1) பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை

2) புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தமை

3) பொதுமக்கள் நிலைகளுக்கு அருகாமையில் ஆயுதங்களைப் பயன்படுத்தியமை

4) பலவந்தமாக சிறுவர்கள் உள்ளிட்டவர்களை படையில் இணைத்துக் கொண்டமை

5) பலவந்தமாக ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தியமை

6) தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தமை

உள்ளிட்ட ஆறு பிரதான குற்றச் செயல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைவான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்பட்டால் அது சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்