திருமாவளவனை திருப்பியது, இந்திய அழுத்தத்திற்கு எதிரான இலங்கையின் அதிரடி நடவடிக்கை?
இன்று வல்வெட்டித் துறையில் நடைபெறும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக
இலங்கை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான, திருமாவளவன் உள்ளிட்ட குழுவினர், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, அதே விமானத்தில் அவர்கள் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இந்திய மீனவர் பிரச்சினை யாழ்ப்பாணப்பகுதிகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இந்தியப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் செல்வது நல்லதல்ல என்ற காரணத்தினாலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என இலங்கைக் குடிவரவுத்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமாவளவன் குழுவினர் சென்னை திரும்பியதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருமாவளவன் தலைமையில், சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தை முற்றுகையிட முனைந்தனர். இதன் போது திருமாவளன் உட்பட 300 விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்பட்டதாகச் சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை இலங்கை வந்த திருமாவளவன் குழுவினர் அரசியல்வாதிகள் என்பதோ, அவர்கள் பார்வதியம்மாள் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ள வந்திருந்ததாகவோ தாம் அறிந்திருக்கவில்லை எனவும், திருமாவளவன் பார்வதி அம்மாள் இறுதிக் கிரிகைளில் கலந்து கொள்வதற்காக மீண்டும் இலங்கை வந்தால் அவர் அனுமதிக்கப்படுவார் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க இந்திய மீனவர்கள் பிரச்சனையில் கடுமையான அழுத்தங்களை இந்தியா இலங்கை மீது பிரயோகித்தமைக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை இலங்கை அரச தரப்பு மேற்கொண்டிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை தமிழக அரசியல்வாதிகளை இலங்கை அரசு ஒரு போதும் மதிப்பதில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.