அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Saturday, February 12, 2011

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும்


சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும்

நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதை அவர் முகம் காட்டியது. ‘நீங்கள் இந்தியாவா, ஸ்ரீலங்காவா ? ‘ என்று அவர் கேட்டார்.
ராபர்ட் அகஸ்ஸி மொழிபெயர்த்திருந்த அவரின் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும் ‘ நாவல் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. ஒரு சிறுமியின் இயற்கையான அறிவுக்கூர்மையும் சிருஷ்டிகரமும் அவரின் பெற்றோர், சுற்றத்தார், பள்ளி ஆசிரியைகள் ஆகியோரினால் நாசமாக்கப்படுகின்றது என்பதை வெவ்வேறு கோணங்களில் அந்நாவலில் அவர் சித்தரித்திருக்கிறார். நாவலில் வரும் சிறுமிக்குப் பெயர் கிடையாது. அவள் மனம் இயற்கையாக கட்டமைக்கப்படுவதைச் சுற்றியுள்ளவர்கள் காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கருத்துக்கள் ஆக்கிரமிப்பதையும், பள்ளிக்கூடங்கள் பயத்தை உருவாக்கி மதத்தைச் சாரும் மனத்தை உருவாக்குவதையும் ஆழமான பார்வையுடன் பார்த்திருந்தார். வீட்டின் பின்புறத்திலுள்ள நந்தவனத்தில் திரியும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அவர் சித்தரிக்கும் இடங்களில் இயற்கையான கவித்துவம் வெளிப்பட்டிருந்தது.
நான் டோகுடோ ஷோனிடம் இந்த நாவலை சிலாகித்துப் பேசினேன். தான் எழுதிய நாவல்களில் பிடித்தமான நாவலாக இதைக் கருதுவதாகவும், ஆனால் பெரும்பாலோர் ‘சுழலும் காலம் ‘ என்ற நாவலையெ முக்கியமானதாகச் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் எழுத்துத்துறைக்கு வந்த விதம் பற்றிக் கேட்டேன். அவர் கூறியதின் சுருக்கத்தைக் கூறுகிறேன்.
நான் எழுத்தாளர் யாசுனாரி கவாபாட்டாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக எழுத முற்பட்ட எனக்கு என் ஆசிரியர் கரஷமாவின் வழிகாட்டல் உதவியாக இருந்தது. அவர் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் என் விருப்பத்துக்குரியனவாக இருந்தது. அவருக்கும் தெரிந்த எந்த ஒரு விஷயம் பற்றியும் கூர்மையான பார்வையுடன் வித்தியாசமாகப் பேசுவார். நான் எழுதியிருந்த கதையை முதலில் அவரிடம் காட்டியதும், அவர் அதை படித்துவிட்டு ‘இந்த கதையைக் கிழித்து உன் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்ச்செடியின் கீழே புதைத்துவிடு ‘ என்று கூறினார். சில நாட்கள் கழித்து என்னைக்கூட்டிக்கொண்டு மியூசியம் சென்றார். அங்கு இருந்த சிலைகள் அவர் சுட்டிக்காட்டிய பின்னே அவற்றினுடைய சிருஷ்டிகரம் என்னைத் தாக்கியது. அவர் கூடச் சென்று கொண்டிருக்கும்போது திடாரென்று ஒரு மரத்தையோ, செடியையோ கல்லையோ காட்சியையோ சுட்டிக் காண்பித்துப் பார்க்கச் சொல்லுவார். அவற்றின் அழகு என் மனத்தில் பதியத்தக்கதாக இருக்கும். அவர் கூட ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு வாடகைக்கார் டிரைவர், அவரைப் பார்த்து ஓடிவந்தான். அந்த டிரைவர் தன்னுடைய குடும்ப விவகாரங்களை ஏற்கெனவே இவருக்குத் தெரிவித்திருப்பான் போலிருக்கிறது. மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளையுடைய அவனை மறுமணத்திற்கு உறவினர்கள் வற்புறுத்திக்கொண்டிருந்த போதிலும் மறுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. நோயுற்ற மனைவி உயிரோடு இருந்தவரை அவளது நலனுக்காகவும் தற்போது குழந்தைகளின் நலனுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளவனாகத் தோன்றினான். தியாகியாக பாவித்து இயங்கிக் கொண்டிருப்பது மனத்திற்கு சோர்வைத்தரும் என்றும், உட்புறமாக மறுமணத்தின் விருப்பத்தை மனம் வற்புறுத்திக்கொண்டேயிருப்பதால் வெளிப்புறத்தில் மனம் அதை மறுத்துக்கொண்டேயிருக்கிறது என்றும், மறுமணம் செய்வதின் மூலம் மனம் சோர்விலிருந்து விடுதலையடைந்து உற்சாகமுறும் என்றும் ஆனால் மறுமணத்திற்குப் பின்னாலும் ஏதாவது ஒரு தியாகத்தைத் தேடி மனம் அலைந்தால் அதை அவன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கரஷ்மா கூறினார்.
அவருக்கு பல வகையான மனிதர்கள் நண்பர்களாக இருந்தனர். எவ்வாறு இத்தனை வகையான மனிதர்களிடம் இவர் நட்புறவு கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியமடைவதுண்டு. சமூகத்தின், அந்தஸ்து மிக்க மனிதர்கள், வட்டாரப் போக்கிரிகள், சிறு வியாபாரிகள், கெய்ஷா பெண்கள் என்று அவருடைய உலகம் பெரியதாக இருந்தது. ஒரு நாள் நான் அவரை காணச் சென்றிருந்தபோது வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். ஒரு கெய்ஷா பெண்ணைப் பார்க்கச் செல்வதாகக் கூறி, நான் மறுத்த போதும், விடாது என்னையும் கூட்டிச் சென்றார். கரஷீமா மீது மிகுந்த மரியாதையுடையவளாக அவள் தோன்றினாள். அவளுக்கு லெளகீகக் காரியங்களில் இவர் பல உதவிகள் செய்திருக்கிறார் என்று என்னால் யூகம் செய்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பேச்சு, பிரதானமாக குழந்தைகளுக்கும், பெரியவர்கள், சூழல், சமூகம் ஆகியவற்றிற்கும் இடையேயான உறவைப் பற்றியதாக இருந்தது. ஒரு சுற்றுலா மையத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த குளக்கரையில் சிறுமியான தன் மகளுடன் அமர்ந்திருந்த போது, பளபளக்கும் நீரைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுமி கையில் இருந்த சிறு தட்டை அக்குளத்தில் மிதக்கும் படியாக வீசி எறிய வேண்டும் போல் இருப்பதாகத் தெரிவித்த சம்பவத்தை அப்பெண் கூறினாள். இதே போல் இன்னொரு நாள் டேபிள் வெயிட்டான கண்ணாடி கோளத்திற்குள்ளே செல்லவேண்டும் போல் இருப்பதாகக் கூறியதாகவும் மற்றொரு நாள் வண்ணத்துப் பூச்சிகளுடன் பறந்து திரியும் கனவு கண்டதாகவும் கூறியதாகவும், இவை எல்லாம் மனத்தின் சிருஷ்டிகர அடையாளங்கள் என்றும், இவற்றை நாசப்படுத்தும் சக்திகளே குழந்தைகளைச் சுற்றிலும் உள்ளதாகவும் அந்தப்பெண் தெரிவித்தாள். அனைத்து விஷயங்களிலும், பெரியவர்களின் கருத்து திணிக்கப்படும் நிலையில், குழந்தைகளின் இயற்கையான கூர்மை அறிவு நிலையில் சிதைக்கப்படுவதாக கரஷ்மா கூறினார். அந்தப்பெண்ணின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. இது நடந்த பலகாலம் ஆகிவிட்டது. கரஷ்மாவும் இறந்து விட்டார். இந்த உரையாடல் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த சிலபொருட்கள் அவற்றின் வடிவம், நிறம், அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணை ஆகியவை தற்போதும் அப்படியே நினைவில் உள்ளன. எழுத ஆரம்பித்தபின் இந்த உரையாடல் என்னை தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. கலை வடிவமாக எழுத இயலாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். தொந்திரவை தாள இயலாமல் எப்படியோ எழுத ஆரம்பித்து முடித்துவிட்டேன். அதுதான் நீங்கள் விரும்பும் ‘சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் ‘ என்ற நாவல்.
- டோகுடோ ஷோனின் கூறியதின் சுருக்கத்தை மேலே கொடுத்திருக்கிறேன். அவரின் தொழில் பற்றி விசாரித்ததற்கு ஒரு எலக்ட்ரானிக் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறி அது சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கூறினார். அதில் எனக்குச் சிறிதளவிற்கு மேல் எதுவும் விளங்கவில்லை. தவிர அவை இந்தக் கதைக்கு அவசியமானதுமல்ல.
***

இதுவல்ல உன் கனவு


இதுவல்ல உன் கனவு


வாசலுக்குப் போய் கையெழுத்து போட்டேன். நியுயார்க்கில் இருந்து என் மகன் எனக்கு இரண்டு ஷர்ட்டுகள் அனுப்பியிருந்தான். அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருவதை ஞாபகம் வைத்திருக்கிறானே என்று சந்தோஷமாக இருந்தது. உள்ளே போனபோது பெல் அடித்தது. மறுபடி வாசலுக்கு வந்தேன். 
யாருப்பா? என்றேன்.
ஒரு இளைஞன் நின்றிருந்தான். நல்ல சிவப்பாக நல்ல உயரத்தில் இருந்தான். தலைமயிரின் கறுப்பும் அடர்த்தியும் மிக வசீகரமாக இருந்தன. திருத்தமான முகத்தில் வியர்வையும் டென்ஷனும் இருக்க, உடையில் நவீனத்துவம் பளிச்சிட்டது.
சார்…. அயாம் கணேஷ்……… கணேஷ் விஸ்வநாதன். ஆப்பிள்ல சிஸ்டம் அனலிஸ்ட். மாடில ஓரு போர்ஷன் காலியா இருக்குன்னு கேள்விப்பட்டேன்…….. கரெக்டா? என்றான்.
கரெக்ட்…..ஆனா பாச்சிலர்க்கு விடற ஐடியா இல்லேப்பா…. என்றேன்.
இல்லே சார். அயாம் கோயிங் டு பி மாரீட் சூன் என்றான். கர்ச்சீப் எடுத்து முகம் துடைத்து மாடியை பார்த்தான்.
சரி வா…. என்று தாழ்ப்பாள் நீக்கினேன்.
தாங்க்யூ சார். உள்ளே வந்தான். தாழ்வாரத்தில் ஷ§க்களை கழற்றிவிட்டு குழாயடியில் கைகளைக் கழுவிக் கொண்டு உட்கார்ந்தான்.
யூ நீட் வாட்டர்?
யெஸ் சார்…..
சில்லென்று நீட்டினேன். ஒரே மடக்கில் குடித்து விட்டு. தாங்க்யூ……….. என்று 
புன்னகைத்தான். சொல்லுப்பா…. எப்ப கல்யாணம்? வெஜிடேரியனா இல்லையா? ஆபிஸ் எங்கே?என்றேன்.
வந்து சார்….. என்று மறுபடி முகம் துடைத்தான். உங்ககிட்ட எதையும் மறைக்கப் போறதில்லை. லவ் மேரேஜ், ஐ மீன் போட்டோஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுக்கப் போறேன். ஒரு மாசம் டயமிருக்கு….. அவ பேரு ஷகீலா……. அவ அப்பா ஹஜ் கமிட்டில இருக்கிற தீவிரமான முஸ்லீம்…. எங்கப்பா விஸ்வநாதன் சிவன் கோவில் ட்ரஸ்டி……. எப்படி சம்மதம் கிடைக்கும்? செங்கல்பட்டு காலேஜ்ல படிக்கும்போது அவளை மீட் பண்ணி இப்ப கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு…. ரெண்டு பேரும் மேஜர்……… எனக்கு பதினெட்டாயிரம் கெடைக்கறது….. சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கு…. உங்களுக்கும் என் வார்த்தைகள்ல நம்பிக்கை இருந்தா வீடு கொடுங்க சார்…. ஐ லைக் திஸ் பிளேஸ் வெரி மச்.
அவனையே உற்று பார்த்தேன். கண்களில் கள்ளத்தனம் எதுவுமில்லை. இளங்கன்று ரகம். இன்னும் விளையாட்டுத்தனம் போகாத உச்சக்கட்ட சிறுவன் போலிருந்தான். எதிர்பார்ப்புடன் என்னையே பார்த்தான்.
இது என் ஐடி கார்ட்…… இது எங்க வீ;ட்டோட ஐ மீன் எங்க ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் காப்பி…. இது ஸாலரி பில்……. இதெல்லாம் யுனிவர்ஸிட்டில நான் வாங்கின சர்டிபிகேட்ஸ் என்று ஃபைல் திறந்து அக்கறையாக சுட்டிக்காட்டினான். என்னை ஆர்வமாக பார்த்தான்.
சரி கணேஷ்….. எப்ப வேணா வா….. டோக்கன் அட்வான்ஸா நூறு ரூபா கொடு. வாடகை ஆயிரம் ரூபாய் என்றேன்.
தாங்க்ஸ் சார்…. தாங்க் யு வெரி மச் என்றான் மலர்ச்சியுடன்.
கணேஷ் குடித்தனம் வந்து ஒரு வாரம் ஓடி விட்டது. பொறுப்பான பையனாக இருக்க வேண்டும் என்கிற என் யூகத்தை நிஜமாக்கினான். ஒரு பர்னர் கொண்ட காஸ் ஸ்டவ். சின்ன குக்கர். பச்சை காய்கறிகள், ரொட்டி செஃப் மாஸ்டர். உடற்பயிற்சி கருவிகள். ஹரிஹரனின் பாடல்கள். விவேகானந்தர் படம். பில்கேட்சின் ப்ரொஃபைல் எல்லாமே கச்சிதமான இடம் பார்த்து வைத்திருந்தான். காலையில் பிரட், மதியத்துக்கு தயிர் சாதம், ராத்திரி ரெடிமேட் ரொட்டி,
கிரீன் ஸாலட் என்று அசத்தலாக தயாரித்தான். தினம் என்னுடன் அரைமணி நேரமாவது பேசினான். மாடி ஏறிப் போனேன். டெலிவிஷனில் க்விஸ் பார்த்துக் கொண்டிருந்தவன் உடனே வால்யூமை குறைத்தான். வரவேற்றான்.
உட்காருங்க சார்….. கார்ன் சூப் செய்யப்போறேன்சாப்பிடறீங்களா?
கார்னா? காளானான்னு சிரித்தேன். நா சுத்த சைவம்பா கணேஷ்.
நான் மட்டும் என்ன சார்? என்று அவனும் சிரித்தான். கேக் கூட சாப்பிட மாட்டேன்… முட்டை வாசனை கொமட்டும். எங்க வீட்டுல பூண்டு ஒரு நாள் கூட வாங்கினது கிடையாது.
நீ பழகிக்கணும்பா…. ஷகிலா பிரியாணி சாப்பிட்டு வளர்ந்த பொண்ணில்லையா?
வேணும்னா அவ சாப்பிடட்டும் சார்.
ரெண்டு பேருக்கும் ரெண்டு சமையலா. வெரிகுட் என்று சிரித்தேன்.
இந்தா….. லெட்டர் வந்தது மத்தியானம்.
அப்படியா என்று வேகமாக வந்து வாங்கினான். இப்படி அப்படி திருப்பி பார்த்தான். டேபிளில் போட்டான். முகம் மாறிவிட்டது.
ஏம்ப்பா கணேஷ் யாரு லெட்டர்? ஷகிலாவா?
இல்லே….. எங்கம்மா.
பிரிச்சு படிக்கலையா?
அவசியம் இல்ல சார் என்றான் தரையை பார்த்து. ஒண்ணு அழுதிருப்பா…….. வேண்டாண்டா இந்தக் கல்யாணம், கெஞ்சிக் கேக்கறேன் வந்துடுப்பான்னு ஒப்பாரி வெச்சிருப்பா….. மூட் ஸ்பாயில் ஆயிடும்.
ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு சானல்களை மாற்றினான். மெக்கா மெதினா வந்ததை மாற்றி, யாஸர் அராஃபட்டை மாற்றி, அரசியல் கட்சி ஊர்வலம் மாற்றி, டாப் டென் மாற்றி, டாக்ஷோ மாற்றி கடைசியில் சிதம்பரம் கோவில் வந்து…….. நிறுத்தினான். என்னதான் யாதும் ஊரே யாவரும் கேளிர்னு சொன்னாலும் நம்ப பாணி கோவில்களோட அழகே தனிதான்…… இல்லையா சார்? அந்த அமைதி, அந்த ஸ்கல்ப்ச்சர், அந்த கற்பூர வாசனை, 
அந்த கண்டாமணி…. ஸம்திங் வொண்டர்ஃபுல். புன்னகைத்தேன், கிளம்பினேன்.
முழுதாக ஒரு நாள் மாடியிலிருந்து சப்தமே இல்லை. கணேஷ் செங்கல்பட்டு போய்விட்டானா என்று சந்தேகமாக இருந்தது. மாடிக்குப் போனேன். திகைத்தேன். கட்டிலில் கிடந்தான். ஒரே நாளில் ஐந்து கிலோ குறைந்த மாதிரி இருந்தான். முகத்தில் அபார சோர்வு.
என்னப்பா கணேஷ். என்ன ஆச்சு? என்று உட்கார்ந்தேன்.
வயிறு கட்பட் ஆயிடுத்து சார்… என்று அடிக்குரலில் சொன்னான். நீங்க சொன்னீங்களே பழகிக்கணும்னு….. போட்டோ ஹோட்டல் போய் பிரியாணி சாப்பிட்டேன் சார்…. வாயும் ஒத்துக்கலே, வயிரும் ஒத்துக்கலே, பயங்கர அப்செட்… மாத்திரை சாப்பிட்டும் இன்னும் சரியாகலே.
கஞ்சி தரட்டுமா?
இல்லே சார்…. லங்கணம் பரம ஒளஷதம்னு எங்க பாட்டி சொல்லுவா…. ஷி இஸ் ரைட்.
எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் ஜீரணமாகாது கணேஷ்.
சார்….. பழக்கங்களுக்கு நாம அடிமை…. வழக்கங்கள் நம்மோட எஜமான்கள். அதனாலதான் சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம்னு எல்லாமே சின்ன வயசுல இருந்தே ஊட்டப்பட்டு வருது நமக்கு. தொட்டில் பழக்கம்னு சொல்றோமே அதான். பிறந்த சூழல், வளர்ந்த வீடு, பழகிட்ட வாழ்க்கை முறை, ஏற்படுத்திண்ட வழக்கம் எதையும் மாத்திக்க முடியாது. ரொம்ப கஷ்டம். மாத்திக்க நினைக்க நினைக்க கஷ்டம். எதுக்கு மாத்திக்கனும்? எதுக்கு அவஸ்தைப்படனும்? உன்னைப் போலவே பிறந்து வளர்ந்த சூழல்ல இருந்து ஒரு வாழ்க்கைத் துணை உனக்கு கெடைக்கும்போது அடிப்படை பிரச்சனைகள் எதுவுமே வரப்போறதில்லையே….. பேஸிகலா எல்லாமே நெறைவா இருக்கும்போது உன் வேலைல நீ மேலே மேலே கான்ஸன்ட்ரேட் பண்ணின்டு போகலாமே? சாதாரண அனலிஸ்ட்டா இருக்கிற நீ, வைஸ் பிரஸிடென்ட் ஆஃப் ஆப்பிள்னு ஆகலாமே? அதைவிட்டு தெனம் தெனம் சாப்பாட்டையும் ஸ்வாமியையும் பழக்கத்தையும் பிரச்சனைகள் ஆக்கிண்டு….. சகதிக்குள்ளேயே சுழண்டுண்டு…..
சார்……
பெரியவாளுக்கு சரியா சொல்ல தெரியல கணேஷ்…. அதுதான் பிரச்சனை. மேலோட்டமா பாத்தா ஜாதி, மதம்னு உணர்ச்சிகரமான காரணங்கள்தான் சொல்லப்படறது. ஆழமா பாரு கணேஷ் சிக்கலான வாழ்க்கை முறையை இன்வைட் பண்ணிக்கிறதுதான் காதலா? டோட்டலா மாறுபட்டு இருக்கிற துருவங்கள் ரொம்ப சிரமப்பட்டு பின்னி பிணைஞ்சு மூச்சு திணர்றதுதான் காதலா? பெத்தவங்களோட கனவை சிதைச்சுட்டு சுயநலமா சந்தோஷபடறதுதான் நியாயம்னு நினைக்கிற காட்டு தர்பார்தான் காதலா?
இல்லேப்பா… எது வாழ்க்கையை சுலபமாக்குதோ அது காதல்! எது வாழ்க்கைக்கு இன்னும் இனிப்பு சேக்குதோ அது காதல்….புரியறதா?
புரிஞ்சுது சார்….. என்ற கணேஷ். எழுந்து உட்கார்ந்தான். பரவாயில்லையா சார்?
எதுப்பா?
நாளைக்கே வீட்டை காலி பண்றேன் சார்…. அம்மாகிட்டயே போயிடறேன்.
வெரிகுட் கணேஷ் என்று தட்டிக் கொடுத்துவிட்டு திருப்தியுடன் கீழே வந்தேன். வெரோனிகா செலஸ் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாய் என் மகன் ஈ- மெயிலில் கொடுத்த தகவல் எனக்காக காத்திருந்தது.

மறுமணம்


மறுமணம்

அவள் போய் விட்டாள் ‍ எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, அவள்;அன்பு காட்டுவதில் தாயும் தாரமும் ஒன்று தான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுக துக்கம் இரண்டிலும், இத்தனை நாளும் எவள் பங்கெடுத்துக்கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திர ஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாளோ, அவள்!
அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.
நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்; அவள்? போயே போய் விட்டாள்!
அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன, நான் ஏன் இருக்கிறேன்? 'அவள் போனால் போகிறாள்!' என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்? என் தலையில் இன்னொருத்தியைக் கட்டி வைக்கவா? ரகுவும் சீதையும் ஏன் இருக்கிறார்கள்? 'நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்!' என்று பிறர் என்னை வற்புறுத்தவா? எப்படி முடியும்?
தாம்பத்திய வாழ்க்கையில் மனித வர்க்கத்தை விட மணிப்புறாக்கள் எவ்வளவோ மேலானவையாக தோன்றுகின்றன. அவை எந்த காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கைவிடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரை விட்டு விடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர் போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் நாமும் அவ‌ற்றைப் பின்ப‌ற்றுவ‌து சாத்திய‌மா? அது எப்ப‌டிச் சாத்திய‌மாகும்! ர‌குவையும் ராதையும் விட்டு விட்டு நாம் எப்ப‌டி ஊணுற‌க்க‌மின்றி உயிரை விட‌ முடியும்?
அப்புற‌ம் அம்மா? ந‌ம‌க்குப்பின் அவ‌ள் க‌தி? அந்த‌ப் புறாக்க‌ளுக்குத்தான் பாச‌மென்றும் ப‌ந்த‌மென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்ச‌ம் ப‌ற‌க்கும் ச‌க்தி வ‌ந்த‌தும் அவை த‌ங்க‌ள் குஞ்சுக‌ளை விர‌ட்டி விடுகின்ற‌ன‌. ந‌ம்முடைய‌ குழ‌ந்தைக‌ளை நாம் அப்ப‌டி விர‌ட்டிவிட‌ முடியுமா? ஐயோ, எப்ப‌டி முடியும்?
முடியா விட்டால் என்ன‌? இர‌ண்டாந்த‌ர‌ம் க‌ல்யாண‌ம் செய்து கொள்ளாம‌லே நாம் வாழ‌ முடியாதா?
ஏன் முடியாது?
அம்மாவுக்கோ வ‌ய‌தாகிவிட்ட‌து; அவ‌ளால் எந்த‌ காரிய‌த்தையும் இனி க‌வ‌னிக்க‌ முடியாதுதான் அத‌னால் என்ன‌, ச‌மைய‌லுக்குத்தான் ச‌ங்க‌ர‌னை வைத்தாகி விட்ட‌தே! பார்ப்போம்:
நாள‌டைவில் என்னையும் அறியாம‌ல் ஏதோ ஒரு ம‌ன‌க்க‌வ‌லை ஏக்க‌ம்: ஏன் இப்ப‌டி?
இத்த‌னை நாளும் பார்ப்ப‌த‌ற்கு ல‌ட்ச‌ண‌மாயிருந்த‌ ச‌ங்க‌ர‌னை இப்போது பார்க்க‌வே பிடிக்க‌வில்லை. அவ‌ன் ச‌ம‌ய‌லையும் சாத‌ம் ப‌ரிமாறுவ‌தையும் ச‌கிக்க‌வே முடிவ‌தில்லை.
"காப்பி கொண்டு வ‌ர‌ட்டுமா?" சாத‌ம் போட‌ட்டுமா? என்று அவ‌ன் கேட்கும்போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ள‌ வேண்டும் போல் தோன்றுகிற‌து.விய‌ர்க்க‌ விறுவிறுக்க‌ அவ‌ன் எதிரில் வ‌ந்து நின்றால் என் உட‌ம்பே ப‌ற்றி எரிவ‌து போல் இருக்கிற‌து.
சாட்டைப் போல் த‌லைம‌யிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, த‌லை நிறைய‌ பூவை வைத்துக் கொண்டு, ஏதாவ‌து ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை வ‌ளைக‌ள் க‌ல‌க‌ல‌வென்று ச‌ப்திக்க‌, அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ 'அன்ன‌ ந‌டை' போட்டுக் கொண்டிருந்த‌ அந்த‌ அழ‌கு தெய்வ‌ம் எங்கே, இந்த‌ அவ‌ல‌ட்ச‌ண‌ம் எங்கே?
"காப்பியா? இதோ, கொண்டுவ‌ந்து விட்டேன்?"
"சாத‌மா? இதோ, போட்டு விட்டேன்!" என்று அவ‌ள் குயிலைப் போல‌க் கொஞ்சுவ‌து எங்கே? இவ‌ன் க‌ழுதை போல‌க் க‌த்துவ‌து எங்கே?
அவ‌ன் செய்ய‌வேண்டிய‌து வேலை; வாங்க‌வேண்டிய‌து கூலி இவ‌ற்றைத் த‌விர‌ அவ‌னுக்கும் என‌க்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?
இப்ப‌டிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் அன்புக்கு இட‌முண்டா? அன்புக்கு இட‌மில்லை என்றால் இந்த‌ வாழ்க்கை என்னத்திற்கு ? இந்த‌ உல‌க‌ம் தான் என்ன‌த்திற்கு?
இப்ப‌டியெல்லாம் என்ம‌ன‌ம் இப்பொழுது எண்ண‌மிடுகிற‌து; எண்ண‌மிட்டு ஏங்குகிற‌து.
வீட்டில் உள்ள‌வையெல்லாம் போட்ட‌து போட்ட‌ இட‌த்தில் கிட‌க்கின்ற‌ன‌. ஏற்ற‌ இட‌த்தில் எடுத்து வைக்க‌ப்ப‌ட‌வில்லை' வீடே வெறிச்சென்று கிட‌க்கிற‌து. இத்த‌னைக்கும் அவ‌ளைத் த‌விர‌ வீட்டில் எல்லாமே இருக்கின்ற‌ன‌; இருந்தும் என்ன‌? ஒன்றுமே இல்லாத‌து போல‌ல்லவா இருக்கிற‌து!
ந‌ல்ல‌ வேளையாக‌க் குழ‌ந்தைக‌ளைப் ப‌ராம‌ரிப்ப‌த‌ற்கு ம‌ட்டும் த‌ன் சிநேகிதி சீதாவை அவ‌ள் வைத்துவிட்டுப் போயிருந்தாள்.
எதிர் வீட்டில் குடியிருப்ப‌வ‌ள் அவ‌ள்; வாழ்க்கை இன்ன‌தென்று தெரியுமுன்பே வித‌வையாகி விட்டாள். அவ‌ளுக்குத் த‌க‌ப்ப‌னார் இல்லை. தாயார் இருந்தாள். இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ஜீவ‌னோபாய‌ம் அளித்து வ‌ந்த‌து ஒரே ஒரு இய‌ந்திர‌ம் தைய‌ல் மெஷின் உண‌ர்ச்சிய‌ற்ற‌து! ஆம். உண‌ர்ச்சியுள்ள‌ உற‌வின‌ர்க‌ள் ப‌ல‌ர் அவ‌ர்க‌ளுடைய‌ திக்க‌ற்ற‌ நிலையைப் பார்த்தும் பார்க்காத‌து போல் இருந்து விட்டார்க‌ள்! அந்த‌ சீதாதான் இப்போது ர‌குவுக்கும் ராதைக்கும் தாயார்!
குழ‌ந்தைக‌ள் இருவ‌ரும் த‌லைவாரிக் கொள்ள‌வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள். பொட்டிட்டுக்கொள்ள‌ வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள். ச‌ட்டைப் போட்டுக் கொள்ள‌ வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள்.
எந்த‌வித‌மான‌ பிர‌திப‌ல‌னையும் எதிர்பாராம‌ல் அவ‌ள் இத்த‌னை காரிய‌ங்க‌ளையும் செய்து வ‌ந்தாள்.
ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து வீட்டுக்கு வ‌ந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக்குர‌ல் கேட்ட‌து, செவிம‌டுத்தேன்.
"நிமோனியாவாம்; மிக்ச‌ர்' கொடுத்தார்!" என்றாள் அவ‌ள்.
அவ்வ‌ள‌வுதான்; "யாருக்கு நிமோனியா" என்று உட‌னே கேட்டுவிட‌ என் ம‌ன‌ம் துடித்த‌து.
அதற்குள் "காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும்போது நன்றாகத்தானே போனாள்?" அதற்குள் இப்படி வந்துவிட்டதே? என்று அங்கலாய்த்தாள் என் தாயார்.
"எல்லாம் சரியாய்ப் போய்விடும் மாமி!" என்று தேறுதல் சொன்னாள் சீதா.
நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.
"மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம் "ஆரோரூட்" கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம், என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும் 'விருட்'டென்று வெளியே போய்விட்டாள்.
"பகல் பன்னிரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது குழந்தைக்கு நல்ல ஜுரம். சீதா தான் டாக்டர் வீட்டிற்கு அவளை கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா தெரிகிறது!" என்றாள் தாயார்.
அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆற‌வைத்துக் குழந்தைக்கு குடிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. "அம்மா, அம்மா" என்று அலறினாள்.
"உனக்கு அம்மா இல்லேடி கண்ணு." என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் தாயார்.
"ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டி கொண்டு போனாளே அம்மா!" என்றாள் குழந்தை.
"அந்த அம்மா வாடி? இதோ அழைச்சிக்கிட்டு வறேன்!" என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டு சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.
அவள் வந்து குடிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!
சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.
அடுத்த‌ப‌டி ம‌ருந்து கொடுக்கும் வேளை வ‌ந்த‌து. நான் கொடுக்க‌ முய‌ன்றேன். குழந்தை குடிக்க‌வில்லை. அத‌ற்கும் சீதாதான் வ‌ர‌வேண்டியிருந்த‌து.
"ஐயோ, அவ‌ளுக்கு வேலை த‌லைக்கு மேலிருக்குமே" என்று அம்மா வ‌ருந்தினாள்.
" அத‌ற்கென்ன‌ மாமி, ப‌ர‌வாயில்லை!" என்றாள் அவ‌ள். ராதையின் ஜுர‌ம் நீங்குவ‌த‌ற்கு மூன்று வார‌ங்க‌ளாயின‌. அந்த‌ மூன்று வார‌ங்க‌ளும் சீதா, ராதையுட‌னே இருந்தாள்.
இந்த‌ச் ச‌ம‌ய‌த்தில் தான் என் ம‌ன‌த்தில் ஒரு ச‌ப‌ல‌ம் த‌ட்டிற்று. ஏற்கென‌வே ச‌மூக‌ச் சீர்திருத்த‌த்தில் ப‌றுக்கொண்டிருந்த‌ என் ம‌ன‌ம் சீதாவை நாடிய‌து ‍ அவ‌ள் ச‌ம்ம‌திப்பாளா? அவ‌ள் ச‌ம்ம‌தித்தாலும் அவ‌ளுடைய‌ தாயார் ச‌ம்ம‌திப்பாளா?
யார் ச‌ம்ம‌திக்காவிட்டால் என்ன‌? என்னை பார்த்து அவ‌ளும், அவ‌ளைப் பார்த்து நானும் ச‌ம்ம‌தித்தால் போதாதா? ‍ இந்த‌ அநித்தியமான‌ உல‌க‌த்தில் பிற‌ருடைய‌ விருப்பும், வெறுப்பும் யாருக்கு என்ன‌ வேண்டிக்கிட‌க்கிற‌து?
ஒரு நாள் துணிந்து இந்த‌ விஷ‌ய‌த்தை என் தாயாரிட‌ம் வெளியிட்டேன்.
அவ‌ள் "சிவ‌ சிவா!" என்று காதை பொத்திகொண்டு, ரொம்ப‌ ந‌ன்றாய்த்தான் இருக்கிற‌து; இந்த‌ மாதிரி இன்னொரு த‌ர‌ம் சொல்லாதே! என்று சொல்லி விட்டாள்.
அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும் தாயாருக்கும் இடையே பின்வ‌ரும் ச‌ம்பாஷ‌ணை ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.
"என்ன‌ இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாத‌ வீடு ஒரு வீடு ஆகுமா?"‍ இது சீதாவின் குர‌ல்.
"நானும் அதைத்தான் சொல்லுகிறேன்; கேட்டால்தானே?" இது என் அம்மா."
"ஏனாம்? இவ‌ரைவிட‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள், ஏழெட்டுப் பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டாந்தார‌மாக‌க் க‌ல்யாண‌ம் செய்துக் கொள்ள‌வில்லையா?"
"இவ‌ன் என்ன‌மோ ச‌மூக‌த்தை சீர்திருத்தி விட‌ப் போகிறானாம்; வித‌வைக‌ளின் துய‌ர‌த்தைத் தீர்த்துவிட‌ப் போகிறானாம். அத‌ற்காக‌ இர‌ண்டாந்தார‌மாக‌க் க‌ல்யாண‌ம் செய்து கொள்வ‌தென்றால் இவ‌ன் எவ‌ளாவ‌து ஒரு வித‌வையைத்தான் க‌ல்யாண‌ம் செய்து கொள்வானாம் இன்னும் என்ன‌வெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்ல‌வே என‌க்கு வெட்க‌மாய் இருக்கிற‌து!"
"எந்த‌ வித‌வை இவ‌ரை க‌ல்யாண‌ம் செய்து கொள்வ‌த‌ற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்த‌ப் புருஷ‌ர்க‌ள் தான் 'வித‌வா விவாக‌ம்'என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்க‌ள். எந்த‌ப் பெண்ணாவ‌து அப்ப‌டிச் சொல்கிறாளா? ‍ பைத்திய‌ந்தான்."
இதை கேட்ட‌மாத்திர‌த்தில் என் ம‌ன‌க்கோட்டை இடிந்து விழுந்த‌து. எண்ண‌ங்க‌ள் மூலைக்கு ஒன்றாக‌ சித‌றின‌.
ஆனாலும் ஆசை அத்துட‌ன் என்னை விட்டுவிட‌வில்லை. எத‌ற்கும் ஒரு க‌டித‌ம் எழுதி கேட்டுவிடுவ‌தென்று தீர்மானித்தேன். அந்த‌க் க‌டித‌த்தின் முத‌லில் வித‌வா விவாக‌த்தின் அவ‌சிய‌த்தை வ‌ற்புறுத்தி, ந‌டுவே என் ஆவ‌லை வெளியிட்டு, க‌டைசியில் க‌டித‌ம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் த‌ய‌வு செய்து ப‌ர‌ம‌ ர‌க‌சியமாகப் ப‌தில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.
மேற்ப‌டி க‌டித‌த்திற்கு வ‌ந்த‌ ப‌தில் இதுதான்:
வ‌ண‌க்க‌ம்
ம‌றுமண‌ம் செய்துக் கொண்டால் வித‌வையின் துய‌ர‌ம் தீர்ந்து விடும் என்று சில‌ர் சொல்வதை நீங்க‌ள் ந‌ம்புகிறீர்க‌ளா? ‍ என்னால் அதை ந‌ம்ப‌ முடிய‌வில்லை. அத‌ற்காக‌ வ‌ழிவ‌ழியாக‌ வாழ்ந்து வ‌ரும் காத‌லை கொன்றுவிட‌வும் நான் விரும்ப‌வில்லை.
என‌வே என்னை பொறுத்த‌வ‌ரை, நான் பூசிக் கொண்ட‌ ம‌ஞ்ச‌ளும், வைத்துக்கொண்ட‌ குங்கும‌த் தில‌க‌மும், சூடிய‌ ம‌ல‌ரும், அணிந்த‌ வ‌ளைய‌லும் 'அவ‌'ருக்காக‌த்தான்.
வேறொருவ‌ருக்காக‌ அவ‌ற்றை மீண்டும் அணிந்து கொள்வ‌தென்ப‌து இந்த‌ ஜென்ம‌த்தில் முடியாத‌ காரிய‌ம்.
ம‌ன்னிக்க‌வும்.
சீதா.
மேற்ப‌டி க‌டித‌த்தை ப‌டித்து முடித்த‌தும் பெண்க‌ள் ச‌ப‌ல‌ச் சித்த‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் என்று சொன்ன‌ மேதாவிக‌ளின் மேதையை எண்ணி நான் சிரித்தேன், வைர‌ நெஞ்சுட‌ன் அவ‌ள் வாழும் முறைமையைப் ப‌ற்றி எண்ணியெண்ணி விய‌ந்தேன். அப்போது காற்றிலே மித‌ந்து வ‌ந்த‌ கீத‌மொன்று.
"க‌ற்பு நிலையென்று சொல்ல‌ வ‌ந்தார் – இரு க‌ட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"
என்று இசைத்து, ம‌றும‌ண‌ம் அல்ல‌ திருமண‌ம், ஒரு ம‌ன‌மே திரும‌ண‌ம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்ற‌து.

உறவு, பந்தம், பாசம்


உறவு, பந்தம், பாசம்




இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு நிற்கவில்லை. புறக்காட்சியில் மனது ஒருமையில் அனுபவம் கொள்ள, அனுமானம் கொண்டு, திகைப்பு நீங்கச் சிறிதுநேரம் ஆகியது போலும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, ஊரை விட்டகன்றவன்; வெளியூர் வாசம் செய்து, வசதியில் திரும்பியவன். வசீகரமெனத் தோன்றிய, தன்னூர்ப் பாலிய கால வாழ்க்கையை நினைத்து, தன்னுடைய பிற்கால வாழ்க்கையையும் அங்கே கழிக்கத் திரும்பியவன். வீட்டை அடையும் வழிநெடுக ஒரு புதிய ஊர்ப்பிரவேசம் எனத்தான் அடிக்கடி தோன்ற இருந்தது. பழைய இடங்களில் புது வீடுகள் தோற்றமும், அங்காங்கே வெற்றிடங்களில் சிறுசிறு குடிசைகளும், மேலும் ஒரு பெரிய சினிமாக் கொட்டகை, அநேக ஹோட்டல்கள், எல்லாம் முன்பே இவனுக்கு அறிமுகமானதென, மெளனமாக வரவேற்க நின்றிருந்தன போலும்…தன் வீட்டை அடைந்தான். வீட்டின் முன் அறை ஒன்றை மட்டும் தன் உபயோகத்திற்கென வைத்திருந்து, ஏனைய பாகங்களை வாடகைக்கு விட்டிருந்தான்.
வெகு நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த அறையைச் சுத்தம் செய்வித்து, குடியிருக்க வசதி செய்து, காலைக் காரியங்களை முடித்துக் கொண்டிருக்கும்போது, இவன் வருகையை அறிந்த இரண்டு நண்பர்கள் இவனைப் பார்க்க வந்தனர். திண்ணையில் அவர்களோடு அமர்ந்து கொண்டு தெருவையும் கவனித்தபடிப் பேசிக்கொண்டிருந்தான். தான் இல்லாத கால, ஊர் நடப்புகள் என அநேக விஷயங்களை அவர்கள் சொல்லியும் இவன் கேட்டும் தெரிந்து கொண்டான். தன் தெருவே மாறியிருப்பதையும், ஜன நடமாட்டம் பெருகி இருப்பதையும் கண்டு கொண்டிருந்தான். மனது ஏதோ ஒருவகையில் சஞ்சலம் அடைந்து கொண்டிருந்தது. இரண்டொரு நாள் வாழ்க்கையில், பழக்கத்தில், எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் பேசிக்கொண்டிருந்தான். முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை மறந்தும், ஏதேதோ அது இதை விசாரித்துக் கொண்டிருந்தான். ஒரு நண்பனைப் பார்த்து, '…அந்தக் கிழவி செளக்கியமாக இருக்கிறாளா ? ' என்று கேட்டபோது அவர்கள் சிரிக்கலாயினர். எதிரே தெருவில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இடுப்பில் ஒரு குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். கையைப் பிடித்து நடத்தி அழைத்துப்போன மற்றொரு குழந்தையுடன், தன் வயிற்றிலும் ஒரு சிசுவைச் சுமந்தாளென ஒரு பூரண கர்ப்பிணி என அவள் தோன்றினாள்.
'…அதோ போகிறாள் பார் நீ கேட்ட கிழவி… ' என்று இவன் நண்பன் மேலும் சிரித்தான். இவன் திடுக்கிட்டு என்னவென்றதற்கு 'நீ கேட்ட பாட்டியின் பேத்தி அவள் இறக்கும்போது இவள் பிறக்கவில்லை என நினைக்கிறேன்… ' என்றான். மேலும் 'நீ ஊரைவிட்டுச் சென்று எவ்வளவு நாளாகிறது, ஏதோ மறந்து போனதுபோல விசாரிக்கிறாயே. வந்த அசதி போலும் ' என்று சொன்னான். பிறகு வந்து பார்ப்பதாக அவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.
சாப்பிட்டு, களைப்பு தீர உறங்கி, இவன் எழும்போது, மாலை நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. காபி சாப்பிட்டு வெளியே சென்று சுற்றி வரலாமென வீட்டை விட்டுப் புறப்பட்டான். கடைவீதியாகச் சென்று மற்றுமொரு வீதியையும் கடந்து மேற்குச் சந்நிதியை அடையலாம். அதையும் கடந்து கோயில் குறுக்காக ரயிலடியை அடைந்து, சிறிது உட்கார்ந்து, வீடு திரும்பினால், சாப்பிட்டுப் படுக்க நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக் கிளம்பினான். கடைவீதிக் கூட்டத்தைச் சாவதானமாக நடந்து கடந்துவிட்டான். மற்றொரு வீதியைக் கடக்கும்போது ஜன நடமாட்டம் குறைந்து விட்டது தெரிந்தது. இவன் மனதில் பழைய கால ஞாபகங்கள் சிறிது சிறிதாகத் தோன்றலாயின. சந்நிதித் தெருவை அடைந்து, ஒரு வீட்டைக் கடக்கும் போது, இவன் மனதில் ஒரு பரபரப்புக் கண்டது. அவ்வீட்டிற்கு இவன் அநேகதரம் தன்னுடைய மிக நெருங்கிய நண்பனுடன் சென்று இருக்கிறான். அவனை ஊரில் சந்திக்கும் ஆர்வமும், அவனோடு சேர்ந்து இப்போது வாழ்க்கை கொள்ளலாம் என்ற எண்ணமும்தான் இவன் ஊர் திரும்ப ஒருவிதக் காரணம். காலையில் அவனைக் காணாததும், ஏனையோரிடம் அவனைப்பற்றி விசாரிக்காததும், வெகு உணர்ச்சியில் தன் தவறென இவனுக்குத் தோன்றியது…
அவ்வூர்க் கோவில் மிகப்பெரியது. சரித்திரப் பிரசித்தி பெற்றது. மகோன்னத தசையில் ஆண்ட சோழ மன்னன் ஒருவனால், வெகு காலம் முன்பு கட்டப்பட்டது.
ஒரு காலத்தில் அவ்வூரே அந்தக் கோவிலைப் பொருத்து நிர்மாணம் ஆனது. ஆனால் இப்போது அகலமான தேரோடும் வீதிகளையும், சந்நிதிகளையும், தெற்கே ஒதுப்புறமாகப் பாழ்படும் ஒரு அமைதியில் விட்டு, தற்போதைய நகரமென்பது வடக்கே வெகுதூரம் வியாபகம் கொண்டிருந்தது. மேற்கு வீதிக்கப்பால் மேற்கே நெடுந்தூரம் அத்துவான வெளியென, தொடுவானம் வரையில் கண்டவெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே சூரியன் மறைய இருந்தான். மறையும் சூரிய ஒளி சந்நிதித் தெரு முழுதும் படர்ந்து கோபுரவாயிலையும் கடந்து கொடிமரம் வரையில் சென்று தெரிந்தது. மாலையில் கோவிலுக்குச் செல்லுபவர்கள் நிழல்கள், அவர்களை முந்திக் கொண்டு கர்ப்பக் கிருஹ இருளில் மறைந்து ஒன்றாவது, ஒரு உன்னதக் காட்சியென மனதில் கொள்ள இருக்கும்.
மேற்கு கோபுரத்தைத் தாண்டி உட்சென்றவன், பக்கத்தில் இருந்த ஒரு சிறு மண்டபத்தில் உட்கார்ந்தான். ஒருபுறம் கோபுரமும், மறுபுறம் ஈசுவர சந்நிதியும் தெரியும். முன்னும் பின்னும், இடிந்துகொண்டிருக்கும் பிரும்மாண்ட மதில்சுவர்களின் பாழ்படும் தோற்றம். கர்ப்பக்கிருஹம் இப்போதே இருள் கொண்டுவிட்டது. சர விளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. அந்த ஆழ்ந்த மெளன இருள் ஒளி அமைதியில் அருஉரு என எட்டிய லிங்கம் சோபையில் புலனாகித் தெரிந்தது. மதில்சுவர் இடிபாட்டிற்கிடையில் முளைத்து இருக்கும் புற்பூண்டுகளை, காலம் தவறி மேய்ந்து கொண்டிருந்தன, இரண்டொரு ஆடுமாடுகள்; மற்றும் சில, மூடிய கண்களுடன் அசைபோட்டுப் படுத்துக் கிடந்தன. ஒரு அமானுஷ்ய மயான வெளி அமைதி, அறிவிற்கப்பால் உணரும் வகை, ஒரு சங்கேத மெளனப் புதிரென, புறக்காட்சித் தோற்றம் கொடுத்தது.
எதிரே, ஒளிபடர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து வரும் நிழல்கள், ஒன்றுகூடிப் பிரிந்து சலிக்கும் ஒரு விநோதக் காட்சியில், உட்கார்ந்திருந்த இவன் லயித்திருந்தான் போலும். யாரோ சிலர் கோவிலுள் நுழைகிறார்கள் போலும். நான்கைந்து பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவள், சிறிது தூரத்திலிருந்தே இவனைக் கவனித்து வந்ததில், இவனைத் தெரிந்து கொண்டவள் போன்று, இவனைக் கடக்கும்போது, பார்த்து, ஒரு புன்சிரிப்பில் நின்றாள். இவன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உடன் உணர்ந்து, நடந்து, ஏனையோருடன் கூடிக் கோவிலுக்குள் சென்றாள். அவள் தோற்றம், வசீகரம், புன்னகை எல்லாம் கொஞ்சம் தாமதித்தே இவன் மனது கண்டது போன்று அவளைத் தெரிந்துகொள்ள, அவள் போவதையே கவனித்திருந்தான். அவள் ஒரு தரம் திரும்பி இவனைப் பார்த்தாள். மாலை ஒளி அவள் முகத்தில் விழ அவள் வெகு வசீகரமாகத் தோன்றினாள். அவளை யாரென இவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. கோவிலுள் சென்று அவர்கள் மறைந்து விட்டனர். ஞாபகம் காண, மறதியைத் தேடுவதில் ஜடமென இவன் அவ்விடத்திலேயே வீற்றிருந்தான். எவ்வளவு நேரமென்பது இவனுக்கு நிதானம் இல்லை. உலகு இருள் கொண்டுவிட்டது. உள்ளே சரவிளக்குகள் வெகு சோபையில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. திடாரென மணி ஓசை அதிரக் கேட்டது. கோயில் மாலை பூஜை ஆரம்பமாகியது……
அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். எல்லோருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள். இவனைக் கடக்கும்போது, அவள் இவனுக்கு வெகு சமீபமாக வந்து நின்று '…..யோஜனைகள் இன்னும் முடியவில்லையா…கோவிலுள்ளாவது வந்து இருக்கலாமே….. ' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இவனுக்கு அவளைத் தெரியவில்லை. மேலும் அவனுக்கு சஞ்சலம் கொடுக்காவகைக்கு எண்ணியவள் போன்று '….ஏன் தனியாக ? உங்கள் நண்பர் கூட வரவில்லையா ? ' என்றதும், மனதில் ஒரு ஒளி பாய்ந்ததென அவள் யாரெனக் கண்டு கொண்டான். '…என்ன கெளரி. உன் மாதிரித் தோன்றியும் நீயென நினைத்துப் பெண்களோடு பேச முடிகிறதா ?…… ' என்று சொன்னவன், ஏனையவர்கள் எட்டிக் காத்து நின்று இருப்பதைப் பார்த்து, எழுந்து அவளுடன் நடக்கலானான். '…..அங்கே அந்த வீட்டிலேதானே….நான் இன்று காலையில்தான் வந்தேன்….சாப்பிட்டு இரவு வருகிறேன். உன்னிடம் சில விஷயங்கள் பேசித் தெரிந்து கொள்ளவேண்டும்……. ' என்றவன் கோபுர வாயிலைத் தாண்டி அவர்களைப் பிரிந்து சென்றான். அவன் பேச்சுகளுக்குக் கெளரி பதில் பேசவில்லை. இருவரும் தத்தம் பழைய வாழ்க்கைச் சிந்தனைகளில் சென்று கொண்டிருந்தனர்.
இவன் வீட்டிற்குப் போகும் வழியில் இரண்டொரு சிநேகிதர்களைச் சந்தித்தான், வெகு அவசரத்திலும்–காலையில் மறந்தது எனத் தோன்றியதை– தன்னுடைய பாலிய நண்பனைப் பற்றி விஜாரித்தான். அவர்கள் சொன்னது இவனுக்கு ஆச்சரியம் கொடுக்க இருந்தது. சில வருஷங்களுக்கு முன்னால் அவன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஊரை விட்டுப்போய் விட்டதாயும் எக்காரணம் என ஒருவருக்கும் தெரியாதெனவும் அவர்கள் சொன்னார்கள்.
சாப்பிட்டு, சீக்கிரமாகவே கெளரி வீட்டிற்குச் செல்லுவதில் தன் மனது ஆர்வம் கொள்ளுகிறது என்பதை, இவன் கண்டுகொள்ளாமலில்லை. பழைய நினைவுகள் வசீகர மெனப்படுவதிலும், சோகமும் கலந்ததென இவனுக்குத் தோன்றியது. ஊரை விட்டோடிய தன் நண்பனுடன் வெகுகாலம் ஒன்றென வாழ்ந்தவள் கெளரி. எவ்வளவோ நாட்கள் அவனுடன் கூடிக் கொண்டு இவன், அவள் வீட்டிற்குப் போய்ப் பேசியிருக்கிறான். அவனை இப்போது பார்க்க முடியாதது வெகுவாக வருத்தமெனத் தோன்றுகிறது.
இவன் கெளரி இருந்த மேல சந்நிதித் தெருவை அடையும்போது, ஊர் அரவம் அடங்கி, அரை இருளில் தெருவே ஒரு தூக்கத்தில் ஆழ்ந்ததெனத் தோற்றம் கொடுத்தது. ஒரு காலத்தில் அத்தெரு முழுவதும் தேவதாஸிகள் இருந்தனர். வழி வழியாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு குடும்பப் பிரபல தாஸிகள், அவர்களின் இசை நாட்டிய கலைத் தேர்ச்சி, பழைய பெரிய மனிதர்களுடைய ஈடுபாடு…..என அநேக ஞாபகங்களைக் கொண்ட தெரு அது. ஒரு வசீகரம் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை அது இப்போது அளித்துக் கொண்டிருந்தது. யார் யார் இப்போது அங்கு வசிக்கிறார்கள் என்பதற்கில்லை. பழைய வீடுகள் நடுநடுவே பெரிய புது வீடுகளும் இருந்தன. திடுக்கிட எங்கிருந்தோ கேட்ட ஒரு நாயின் குரைப்பு, இவனைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சுவான லக்ஷியம் எட்டிய இருளிலும் உருவாகியது போலும்……
கெளரி, தன் வீட்டுச் சிறு திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றிருந்தாள். பாலிய கால தன் வாழ்க்கை நினைவுகளை எதிர் மாடத்தில் தெரிந்த விளக்கொளியில் கண்டு நின்றாள் போலும். அவள் நிழல் பாதிக்குமேல் பக்கவாட்டில் கீழ் குறட்டுச் சுவரில் ஆடிக் கொண்டிருந்தது. வீட்டு வாயிலை அடைந்தவன் அவள் நிழலைத்தான் முதலில் கண்டான்போலும். ஒரு பயங்கரம், இனிமையைத் தூண்டி இழுக்கும் பிரமையை அடைந்தான். இவனை, இவன் வந்ததை, கெளரி கவனிக்கவில்லை. '….என்ன கெளரி….. ' ' என்ற சப்தம் கேட்டு இவனைப் பார்த்தாள். எதிரே தீபத்தின் சுடரொளியில் தன் நிருத்தியம் கலைவுபட்டதென, ஒரு இனிய கனவு கலைய இந்த நினைவா என்பதில் இவள் மனம் வருத்தமடைந்து….. 'உள்ளே போகலாம் ' எனச் சொல்லி இவன் தொடர அவள் உட்சென்றாள். கூடத்தில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இவனை உட்காரச் சொல்லி அவளும் சிறிது தூரத்தில் உட்கார்ந்துகொண்டாள். வாயிற் கதவு திறந்தபடியே இருந்தது. சாத்தவில்லை. வாயிற் புரைக்கை விளக்கையும் உள்ளே எடுத்து வரவில்லை.
தன் நண்பனுடன், இவன் அநேகந்தரம் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறான். கடந்த காலம் பிளவு கொண்டது எனத் தோன்றாவகைக்கு, நேற்றுக்கூடத்தான் இங்கு வந்ததான எண்ணம் கொடுக்கும் வகைக்கு, அவ்வீடு பழைய நிலைமையிலேயே தோன்ற இருந்தது. ஒரு வகையில், காலையிலிருந்து தன் மனம் கொண்ட சஞ்சலம் சிறிது குறைந்ததென இவனுக்கு தோன்றியது.
அநேக குடும்ப நினைவு ஞாபகங்களுக்கு வசீகரம் கொடுக்க நின்ற இந்த வீட்டில்தான் கெளரி, வழி வழியாக வந்த ஒரு கெளரவ தாஸி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவள். தன் வழிக்குப் பின் வாரிசு இல்லாது தன் குடும்பமும் தன்னுடன் முடிவு பெறாது இருக்க, அதன் லக்ஷியத்தின் சாசுவதத்தை இப்போது வாழ்வில் கடைப்பிடிக்கிறாள் போலும். பெண்மையின் சக்தி தோன்ற, அவள், பார்ப்பவர்களுக்கு ஒரு இனிமை, கவர்ச்சி, ஒரு பயங்கரம் தோன்ற இருப்பவள் போல ஒருவரிடமும் ஒட்டாது, வெகு சகஜமாக யாரிடமும் பழகுபவள். சிற்சில சமயங்களில் அவள் நடையுடை பாவனைகளிலும் பேச்சிலும், ஒரு நிச்சயம் தோன்றா பிரமிப்புத் தெரிய இருக்கும்.
உட்கார்ந்து கொண்டவன் சிறிதுநேர மெளனத்திற்குப்பின் '…..இன்று காலையில்தான் வந்தேன்…. உன்னைக் கோவிலில் சந்தித்த பிறகு சிறிது நேரம் சென்று கேள்விப்பட்டேன்….. ' என்றான். அவள் குறுக்கிட்டு '…..என்ன….. ' என்றாள். '…..உன் சிநேகிதன்….. நம் நண்பன் ஊரை விட்டுப் போனதை உன்னை விட்டு. ' எனச்சொல்ல அவளும் சிரிக்கலானாள். '…….இல்லை நீங்கள் அதற்கு முன்பே ஊரைவிட்டுப் போய் விட்டார்கள்… ' அவள் பேசியது சிரிப்பது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளிப்பதாக இருந்தும் ஏன் என்பது புரியவில்லை.
இவன் '….உன்னைக் கேட்கலாம் என வந்தேன்… உன்னைவிட்டு ஊரைவிட்டுப்போன காரணம் ? வெகு வருத்தமாகத் தோன்றுகிறது. சொத்தை எல்லாம் விற்று ஊரை விட்டுப்போனது…. ' இவன் பேசுவது இவனுக்கே பொருத்தம் காணாது தட்டுத் தடுமாறியது போன்று இருந்தது. இவன் உதவிக்கென கெளரி பேச்சை ஆரம்பித்தாள். '…..எனக்கும் காரணம் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் வந்த காரணமும் தெரியவில்லை…..எதை, எப்படி நான் சொல்லமுடிகிறது ?….. ' ' என்று சொல்லி அவள் வருத்தத்தை, இவன் தன் சிரிப்பில் கலந்து கொண்டாள். தன் வீட்டை ஒரு தரம் மெளனமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு இவனையும் பார்த்தாள். அவள் அலக்ஷிய பாவத்தை இவனால் ஏற்கமுடியாது. 'என்ன இருந்தாலும்–தாஸி ' என இவன் மனம் எண்ணியது.
சிரித்துக்கொண்டே மேலும் கெளரி பேசலானாள். 'பழைய கதையை, கனவெனக் கண்ணெதிரில் மடிவதைக் கண்டும், அதில் ஒரு வசீகரம் உங்களுக்குக் காணமுடிகிறது. நடந்தது எல்லாம் கண்முன் அர்த்தம் மாறி இசைவு கொள்ள முடியவில்லை ? நடப்பில் என்ன முழுமை காண இருக்கிறது ? நடந்ததின் சாயையும் நடக்கப்போவதின் நிச்சயமின்மையும் கலந்து புதிராகப்படவில்லையா ? '
'என்ன கெளரி உன் வேதாந்தம், வேடிக்கையாக இருக்கிறதே…. ' என்றான்.
'ஆமாம், நான் ஒரு தாஸிதானே….ஒரு பெண் தானே உங்களுக்கெல்லாம்…. ' என்றவள், 'நீங்கள் சாய்ந்து கொண்டிருக்கும் தூணைக் கேட்டுப் பாருங்கள் சொல்லும்…உங்கள் நண்பர் போன காரணம்… ' இவன் நண்பன் இந்தத் தூணடியில்தான் உட்கார்ந்து பேசுவது இவனுக்கு ஞாபகம் வந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகமடையும் வசீகரம், அவள் வயதைக் குறைத்துக் கொண்டிருந்தது. அவள் பேச்சுகளும் பாவமும், பாலியக் குறுகுறுப்பை அளிப்பதாக இருந்தன.
'உங்கள் நண்பரைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் இப்போது என்னிடம் வந்து கேட்பதில் உங்களைக்கண்டு கொள்ள முடியாதா ? காரணம், நம்பிக்கை கொடுக்காவிடின் என்ன பிரயோஜனம்……அவர் சொத்து சுதந்தரம் எல்லாம் விட்டுப் போய்விட்டார். ஏன், என்னையும் உங்களையும் கூட விட்டுவிட்டுச் சிலர் க்ஷேத்திராடனம் போய் இருக்கிறார் என்று சொல்லவில்லை ? அல்லது எங்கேயோ தாங்கள் க்ஷேத்திராடனத்தின்போது, அவரை, அவரைப் போன்ற ஒருவரைச் சாமியாராகக் கண்டு பேசுமுன் மறைந்த மர்ம மகிமையைக் கூறவில்லையா ? சில நாட்களில் நீங்கள் கேள்விப்படலாம்….அல்லது ஜீவன் முக்தனெனத் தோன்ற, தாடி வளர்த்துக் கொண்டு தமுக்குடன் எட்டிய அடிவானத்தையும், யாராவது தன்னுடன் பேச வருகிறார்களா என்ற ஆசையில் திருட்டுப் பின்னோட்டம் விட்டுக் கொண்டு, கடற்கரையில் அவரைக் கண்டதாகச் சொல்லவில்லையா ? கைகட்டி வாய்புதைத்து வரும் கதாசிரியர்களுக்கு ஞானோபதேசம் செய்ய–பூர்வாசிரமம்–கருகிய காதல்–சாதல் இவைகளைக்–கதாநாயகனாகத் தன்னைக் காணத் தமுக்கடிக்கவில்லை ? அப்படியாக நீங்கள் அவரைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நானும் ஒரு வகையில் கதாநாயகியாயிருப்பேன் அல்லவா….. ? அவருக்குச் சாமி பூதத்தில் நம்பிக்கை இல்லை. நான் எப்போவாவது அவரைத் திடுக்கிடச் சாமி என்று அழைப்பது உண்டு. ரொம்பப் படித்த அறிவாளிதான். கூப்பிட்ட தோஷம் அவரே சாமியாராக ஓடிவிட்டார் போலும்…. ' என்னெதிரில் ஆக முடியவில்லையே என்ற வெட்கம் கொண்டு, நான் பார்க்க முடியாது, சாமியாராகத்தான் ஓடியிருக்க வேண்டும்…. ' எனச்சொல்லி '……நான் சொல்லுவது சரிதானே……. ' என்று சிரித்தாள்.
அவள் பேசுவது ஒரு சமயம் வேடிக்கையாகவும், பின்பு பரிகாசமாகவும் இவனுக்குத் தோன்றியது. மேலும் அப்போதைக்குப் புரியாது பின்பு புரியவிருக்க ஏதோ உளதாகியதாகவும் பட்டது. ஆதிநாளிலிருந்து தனக்கு அவளைப்பற்றித் தெரிந்த விதம், எப்படி என எண்ண முடியவில்லை. அவளை அவன் நேராகப் பார்க்காது, அடிக்கடி வீட்டைச் சுற்றிப் பார்வை கொண்டிருந்தான். ஆங்காங்கே ஒளிபடராத இருள்மூலை முடுக்குகளில் பழைய நினைவுகள் ஒன்று கூடிப் புரிந்து கொள்ள முடியாவகையில், சதி ஆலோஜனை செய்து கொண்டிருந்தன போலும். முற்றத்தில் ஒரு முல்லைக்கொடி, பகலில் சூரிய வெப்பம் காட்டாது, பந்தலின் மேலே படர்ந்து இருந்தது. இந்த இரவில், பார்வையில்படாது, மலர்ந்த மலர்களினின்றும் பிரிந்து வரும் மணம் வீடு நிரம்பக் கணிசம் கொள்ளுகிறது. வானின்று நுகர ஊர்ந்துவரும், ஒரு கனிவு இவன் மனதில் படுவது என இது இல்லை.
பேசிய பிறகு ஏன் பேசினோம் என்ற மனக்குறை ஏற்படுவது எல்லோருக்கும் உண்டு. ஆனால் கெளரிக்கு அது மாதிரி தோன்றவே முடியாது. அவள் பேசியது அவள் பேசினதாகவே தோன்றாது சப்தம் கொள்ளுகிறது. பேசும்போது அவள் சரீர ஒரு சிறு நெளிப்பில், தான் பேசியதையே தன்னின்றும் எப்படி உதறிவிடுகிறாள் ? தான் பேசியதைத் தானே கேட்பவள் போன்று இருக்கிறது அவள் முகபாவம். எவ்வகையில், காரியத்தில், எவ்விதப் பொறுப்பையும் சுமக்காமல் உதறி, அவளால் வாழ்க்கை காணமுடிகிறது ?
'……அல்லது தன்னை விட்டுப் போன தன் மனைவியை தேடிக்காண ஓடியிருப்பாரோ என்னவோ, யாருக்குத் தெரியும் ? ' என்று அவள் சொல்லி முடித்தது இவனை யோஜனையினின்றும் கலைத்துத் திடுக்கிட வைத்தது. அவள் அறியாமையை நினைக்க, ஒருபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. தன்னைப் போலவே தன் நண்பனும் கலியாணம் ஆகாதவனென்பது இவளுக்குத் தெரியவில்லை போலும் '
திறந்து இருந்த வாயிற்படியைத் தாண்டி, வெகு சமீபம் வரை வந்தவளை இவன் கவனிக்கவில்லை. '….பேச்சுச் சத்தம் கேட்டுப் பார்க்க வந்தேனக்கா ' என்று சிரித்துக்கொண்டே, ஒருவள் வெகு நிதானமாக வந்து கூடத்தில் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து வந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கெளரி, 'தம்பி, ஐயாவுக்குக் காபி, வெற்றிலைபாக்கு, வாங்கி வா….. ' என்றவளை ஒன்று வேண்டாமென இவன் தடுத்தும் சோடாவாவது வாங்கி வரச் சொன்னாள். மேலும் இவன் பணம் எடுத்துக்கொடுப்பதைத் தடுத்து '…..என்ன ஐயா செய்வது ? அவமானப்படுத்தவா ? விருந்தாளியாக வந்தவரின் அபேக்ஷைகளை நாங்கள் திருப்தி செய்யவேண்டாமா….என்ன அனசூயா நான் சொல்லுவது ' என்று வந்தவளைப் பார்த்துக் கேட்டாள். 'ஆமாம்…..இவர் நம்ப சாஸ்திரபுராணம் படித்ததில்லையோ என்னவோ….. ' என்று ஒரு அசட்டுச் சிரிப்புத் தோன்றச் சொன்னாள்.
அன்று இரவு இவன், அவர்களுடன் பேசிவிட்டு வீடு திரும்பும்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டது……
மறுநாள் காலையிலிருந்தே இவனுக்குக் கெளரி வீடு செல்லும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது…..அன்று மாலை சீக்கிரமாகவே அவள் வீட்டிற்குச் சென்றான். நேராக உள் சென்றவன், இரண்டொரு பெண்களுடன் அவள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தான். இவனையும் கூப்பிட்டு உட்காரச் சொன்னாள். நேற்றுக் கோவிலில் பார்த்தவர்கள் எனவும், அவர்களும் தாஸிகளெனவும் கண்டு கொண்டான். சிறிது நேரம் ஊர் உலகம் பேச்சுகளெனப் பேசினர்.
கெளரி இவனைப் பார்த்துக் கேட்டாள். 'நேற்றுத்தானே வந்தது…..மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுதானே….. ' அவள் வசீகரம் மிகக் கடுமையாக இவனைத் தாக்கியது. மனது ஒரு வகையில் குதூகலம் கொண்டது…….
'நீ நினைப்பது எல்லாம் இப்படித் தவறாக இருக்கிறதே ' நானும், அவனும் கல்யாணமே செய்து கொள்ளாதவர்கள்–என்னைப் பற்றித் தெரியாதது இருக்கட்டும். அவனைப்பற்றிக்கூட அவ்வளவு பழகியும் உனக்குத் தெரியாதது சிரிப்பாகத்தான் இருக்கிறது…… ' என்று நெருங்கிப் பேசும் வகையில் கூறினான். ஏனையோரின் ஒருமித்த சிரிப்பில், இவள் கலந்து கொள்ளவில்லை. அதன் எதிரொலி என சிறிது சென்று இவள் முகத்தில் புன்சிரிப்புத் தோன்ற, அதிலும் ஒரு கடுமை தொனித்தது போலும். ஆண்களின் தன்மை ஒருவரிடமும் ஒருவிதத்திலும் சரியெனப்படவில்லை. ஆண் பெண் பாகுபாட்டை, உலகே தவறாகக் கண்டு கொண்டிருக்கிறது. உறவு, பந்தம், பாசம், எல்லாமே வியர்த்தமாகத் தோன்றும் வகைக்கு, தர்மமும், சீர்குலைந்து, ஒத்துப் போவதாகக் காண்கின்றனர் போலும். இவள் மனம், யாரை எதற்காக நொந்து கொள்ளுவது என்பது புரியாது தவித்தது.
'…..எவ்வளவு தவறு. தெரிந்து கொள்ளாதது எவ்வளவு சரியாகவும் இருக்கிறது…. ' என்று ஆரம்பித்த கெளரியைத் தடுத்து…… . 'சரி தவறு எல்லாம் தவறாகவே உனக்கு ஒன்றுதான்…. ' என்றான். எல்லோரும் சிரித்தனர். கெளரியின் சிரிப்பு, மேலும் தன்னைப் பற்றிய அவர்கள் எண்ணம் என்னவென்பதும் புரியவில்லை. மேலே யோசிக்க முடியாது கெளரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பைத்தியக்காரச் சதியில் சிக்கித் தவிப்பதான லேசான ஒரு எண்ணம். தன்னை விடுவித்துக் கொள்ள கெளரியை விட்டு வெளிச் செல்லுவதும் மனதுக்குப் பிடித்தமாக இல்லை.
'…ஐயா… ' என்று இவனைக் கூப்பிட்டு அவள் பேச ஆரம்பித்தது ஒரு ஆறுதலாக இருந்தது… 'ஐயா நான் ஒரு பெண்–அதுவும் ஒரு தாஸிப் பெண். தாஸிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் பெண்களையும் பற்றித் தெரியுமோ… ? நீங்கள் கல்யாணம் ஆகாதவர்கள். செய்து கொள்ளாதது ஒரு வகையில் சரி. யாரோ, ஒருவன் மனைவி என, யாரோ ஒருவன் மனைவி என உங்களிடம் கற்பிழந்துகொண்டு நிற்க முடியாத வகைக்கு… ' என்று சொல்லிச் சிறிது பேச்சை நிறுத்தினது, இவனுக்குத் திடுக்கிட இருந்தது. சிறிது கோபத்தில் 'என்ன…என்ன சொல்லுகிறாய்–தனக்குப் புரியாது, பிறருக்கும் புரியாத வகைக்கு… ' என்றான் இவன். இவன் பேசுவதையே கவனிக்காதவள் போன்று, 'நாங்கள் பெண்கள்–அதுவும் தாஸிப் பெண்கள். ஒருவிதத்தில் கல்யாணமானவர்கள், மனைவிகள் எனவும் கொள்ளமுடியும். கல்யாணமான ஒருவள், மறதியில் தன் கணவனை எங்கேயோவிட்டு, எங்கும் தேடுவதான பாவனையை என் மனது அடிக்கடி கொள்ளுகிறது ஐயா. ஆண்களால் கலியாணமின்றி வாழமுடியும். பெண்களால் முடிகிறதில்லை. இந்து தர்மம் அப்படித்தானே…. கன்னியென வாழவும் கூடாது…. முடியாது. குமரிக் கன்னியும் ஒருவனை அடைய ஏங்கி, சாசுவதத்தில்தானே, கன்னியெனவாகிறாள்….. மனைவி எனக் கணவனிடம் வாழ்க்கைப்படுவதி, தன் மனத் தூய்மையை, அவனால் எப்போதும் இழக்காமல் இருக்க முடியும் என்று எந்த மனைவியால் நம்பமுடியும் ? தன் புனிதம் தன் கணவனால் பறிபோக, கற்பிழந்தவளாகத் தன்னை அவள் அப்போது கருதமுடியாதா ? ஒருக்கால் உங்களைப் போன்றவர்களால் அவ்வகையில், கணவனாக முடியும் போலும்…. ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமல் நிற்கிறீர்களே….. பெண்ணைப் படைத்த 'அவன் ' பெண்மையையும் மறக்கவில்லை….. ' என்று சொல்லியவள் 'என்ன அனசூயா நான் சொல்லுவது ' என்று அவள் அசட்டு ஆமோதிப்பைப் பெற நினைத்து அவனைப் பார்த்து சிரித்தாள். 'உங்கள் நண்பரை அவசியம் கண்டு கொள்ளுங்கள்….. அவர் புரிந்துகொண்டவர் ஒருவள் 'நாழிகை ஆகவில்லையா அக்கா ' ' என்று கேட்டாள். 'ஆமாம் ' என்றவள் இவனைப் பார்த்து 'நீங்களும் வாருங்கள் கோவிலுக்கு….நாழிகை ஆகிவிட்டது ' என்றாள் கெளரி.
மாலை சூரியன் மறைய இருக்கிறான். சந்நிதித் தெரு முழுவதும் சூரிய ஒளி பரவி இருந்தது. கோபுரம் தாண்டியும், கொடி மரம் வரையிலும்கூட இவனும் அவர்களுடன் கூடச் சென்றான். முன் நீண்டு சென்ற நிழல்கள் சலித்து ஒன்றைச் சென்று கலந்தும் விலகியும் தெரு வழியே சென்று கொண்டிருந்தன. முன் சென்ற அவர்கள் உட்சென்று மறையும் வரையில் பார்த்து நின்று இருந்தான். அப்பால் கர்ப்பக்கிருஹ சரவிளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. …உட்சென்று மறைந்தவர்களை இவனால் பார்க்கமுடியவில்லை….. விளக்குகள் கலைந்து, மறைந்து, தெரிந்து கொண்டிருந்தன.

கள்ளக்காதல் சில!! நொறுங்கும் இதயம் பல.!!



கள்ளக்காதல் சில!! நொறுங்கும் இதயம் பல.!!

"காதலில் ஏது நல்ல காதல்..கள்ளக் காதல்?"
அட ...அதானே..என்ன ஒரு அற்புதமான தத்துவம்...:))
 நம்ம புர(ச்சீ ..) இயக்குனர் சாமி சொன்னது தான் இது :))
காதலை உண்மையில் தரம் பிரிக்க தான் முடியுமா? வடிவேலு காமடி ஒன்றில் தற்கொலைக்கு முயலும் 'அல்வா வாசு" சொல்லும் வசனம் "காதல்னு வந்துட்டா..இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன, &%$@*!#@*&^ இருந்தா என்ன "? :))


கிழபோல்டு சல்மான் ருஷ்டிக்கு இளசுகள் மேலே வரும் காதலும்(?!),அமரத்துவம் வாய்ந்த அமராவதி,அம்பிகாவதி காதலும் ஒரே அலைவரிசையில் தான் பொருத்தி பார்த்து காதல்னு (?!) முடிவு பண்ணனுமா?


மதுரை லாட்ஜுகளில் மட்டும் கடந்த ரெண்டு மாதங்களில் மூணு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்காங்க.நகைக்காகவோ ,பணத்துக்காகவோ....ன்னால் அது தான் இல்லை. தன் புருஷன்,குழந்தைகளை விட்டுட்டு கள்ளகாதலனுடன் ஓடி வந்த அபலை(?!)கள்!!  இருப்பதை விட்டுட்டு,பறப்பதற்கு  ஆசைப்பட்டு வந்த இந்த காதல் தேவதைகள்
 ,அதே கள்ள உறவாலேயே கொல்லப்படுவதும் இன்னொரு வேதனை...
நல்லக்காதல் ....ன்னால் ...ன்னால்...னால் ...ல்.....

அட! அது பற்றி தான்  ஷேக்ஸ்பியர் ல இருந்து கவிஞர் தாமரை வரை புட்டு புட்டு வச்சுட்டாங்களே! நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை...

ஆனால் கள்ளக்காதல் பற்றி ,பத்தி பத்தியா சொல்ல சில விஷயங்கள் இருக்கு...

என் சித்தப்பா வீட்டின் எதிர்வீட்டில் எப்போ பார்த்தாலும் அந்த வீட்டம்மாக்கும்,அவங்க கணவருக்கும் சண்டை நடந்துட்டே இருக்கும். அவங்களுக்கு ஒரே பையன். அவனும் காதல் திருமணம் முடிச்சிட்டு வந்து அவன் புது மனைவியை அடிச்சு,தொவச்சிட்டு இருப்பான். அந்த குடும்பமே பல நேரங்களில் அப்நார்மலாவே என் கண்ணுக்கு தெரியும். சித்தி தான் ஒரு முறை சொன்னாங்க.. அந்த வீட்டம்மா தன் வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களையும்,கணவனையும் விட்டுட்டு இந்த ஆளு கூட ஓடி வந்து,இந்த பையனை பெத்துகிட்டதாக. 

அவங்க வீட்டில் எல்லாருமே இன்னும் ஏதோ ஒரு உறுத்தலோடவும்,அந்த பையன் ஏதோ ஒரு விதத்தில் தன் ஆத்திரத்தை தன் மனைவி மேலே காமிக்கிரதாகவும், ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்ராங்கலன்னு கூட பலமுறை எனக்கு தோணிருக்கு. எதுக்கு இந்த செயற்கையான பந்தம்...இந்த வாழ்க்கைக்கு தான் அந்த அம்மா ஆசைபட்டங்கலானு தெரியல..அந்த அம்மா மன அமைதிக்கு மதம் மாறி, சதா ஜெபத்தில் இப்போ எல்லாம்...!
 
(ம்ம்...கடவுள் மன்னிப்பது இருக்கட்டும். அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும்,கணவரும் மன்னிப்பாங்கலா னு தெரியல..)

மற்றொரு விஷயம்...

கிட்டத்தட்ட ஆறு ,ஏழு மாசம் முன்னாடி தென் தமிழகத்தில் ஒரு ஊரில் தாலுக்கா ஆபிஸ் முன்னாடி மூணு குழந்தைங்க நிக்கிறாங்க. 7 வயசு பையன் கையில் கடிதம்,அவன் அருகில் 5 வயசு தங்கச்சி பாப்பா, அவள் இடுப்பில் 1.5 வயசு இன்னொரு தங்கச்சி பாப்பா..

எதுக்கு வந்திருக்காங்க??? என்ன கடுதாசி??

கொஞ்சம் நாமும் அந்த கடிதத்தை படிக்கலாம்..

மதிப்பிற்குரிய ஐயா ,
                                     

                                         என் பெயர் அருண்குமார்(7 ),எனக்கு 2 தங்கச்சிங்க இருக்காங்க. அப்பா கூலி வேலை பார்க்கிறாங்க. ஒரு வாரமா நாங்க சரியா சாப்பிடலை. .சரியா தூங்கலை.. தங்கச்சி பாப்பா சதா அழுதுட்டே இருக்கா..அப்பாவும் அழுதுட்டே கஞ்சி காச்சி கொடுக்கிறார். அப்பா வேலைக்கு போனபிறகு நான் தான் பாப்பாவை பார்த்துக்குறேன்...பள்ளியில் நல்லா படிப்பேன்..ஆனால் இப்ப போவல...அம்மாவை ஒரு வாரமா காணோம் வீட்டில்..அம்மா பக்கத்து வீட்டு மாமா கூட போய்ட்டாங்கன்னு  அம்மாச்சி சொல்லி அழுதுச்சு.. எங்க அம்மா எங்களுக்கு வேணும்...எப்பிடியாவது அம்மாவை கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா "

வணக்கத்துடன்,
அருண்குமார்..

இந்த கடிதம் உடனே பரிசீலனை பண்ணப்பட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்பார்வையில் ,மேற்கொண்டு விசாரிக்க சிறுவன் அருண்குமார் வீட்டிற்கு சென்றது...அங்கே..அங்கே..அங்கே.............................................

"பிணக்கோலத்தில்  மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்..."

குழந்தையின் தைரியம் தந்தையிடம் இல்லைன்னு ஊரே அழுதிருக்கு (அந்த புகைப்படம் விகடனில் வந்து இருந்தது...என்னடா மனுஷ உணர்ச்சி இது னு ரொம்ப விரக்தியா இருந்தது எனக்கு...)

என் அழகு அம்மா!!
என்னுயிர்  அம்மா!!

அப்பாக்கு தோள் சாய -
நீ அருகில் இல்லை!!

என் கன்னம் தட்டி
மிருதுவாய் கொஞ்ச-
நீ அருகில் இல்லை!!

பெரிய தங்கைக்கு 
கதை சொல்லி உணவூட்ட-
நீ அருகில் இல்லை!!

சின்ன தங்கைக்கு 
தாய்பால் புகட்ட-
நீ அருகில் இல்லை!!
 

என் அழகு அம்மா!
என்னுயிர் அம்மா..!!!

மகிழ்ச்சியாய்  இனியாவது இரு !!
நாங்களும் இவ்வுலகில் இல்லை.!!!!