அஞ்சறைப்பெட்டி

  • thiraimanam

Thursday, August 18, 2011

தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!



ராஜிவ் கொலை: தமிழக பிரபல பத்திரிகை பொய் பிரசாரம்!

கோவை, இந்தியா: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுபற்றி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த கருணை மனுவே, நிராகரிக்கப்பட்டுள்ளது.
கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களில் ஒரு பகுதியினர் நேற்று (செவ்வாய் கிழமை), கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரியார் தி.க. பொதுச்செயலர் கே.ராமகிருஷ்ணன், “சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகியோரின் உயிர்களைக் காப்பாற்ற தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மதுரையிலும், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் தமிழ் ஈழ ஆதரவு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், “முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
கருணை மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், இம் மூவரையும் வேலூர் சிறையில் சென்று சந்தித்திருந்தார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அவர்களைச் சந்தித்தபின் கருத்து தெரிவித்த அவர், “ராஜிவ் கொலை வழக்கில், முதலில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சித்தரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் அடிப்படையில் வழங்கப்பட்ட மரண தண்டனை என்று சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர்.
அந்த எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு , 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மேல் முறையீடு செய்ததில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்றய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். தற்போது இந்த கருணை மனுக்களைதான்  ஜனாதிபதி நிராகரித்துள்ளார். மத்திய அரசு நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும்.
தமிழகத்தில், 13 ஆண்டுகள் யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இம்மூவரின் உயிர்களையும் காப்பாற்ற முன் வருவார் என நம்புகின்றேன். இம்மூவருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். வேலூர் மத்திய ஆண்கள் சிறை வாசலில் இருந்தவாறு இம்மூன்று பேரின்  உயிர்களைக் காப்பாற்றும்படி தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறியிருந்தார்.
இப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய தினசரி செய்திப் பத்திரிகை ஒன்று, இந்த விவகாரத்தை வேறு விதமாக அணுக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பிட்ட தமிழ் பத்திரிகையை வெளியிடும் குழுமம், அவர்கள் வெளியிடும் சகல பிரின்டட் மீடியா பிரசுரங்களிலும், சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய மூவரும் ராஜிவ் காந்தியைக் கொலை செய்த  கொலையாளிகள் என்று திரும்பத் திரும்ப குறிப்பிடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
நிஜத்தில், இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது, அவர்கள் ராஜிவ் காந்தி வழக்கில் ‘கொலையாளிகள்’  என்ற அடிப்படையில் அல்ல. அந்தக் கொலைக்கான திட்டமிடலுக்கு உதவி செய்தார்கள் என்ற அடிப்படையில்தான் இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது!
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில்,  தற்போதுள்ள ஒரு தலைமுறையே,  இந்தக் கொலை நடைபெற்ற காலகட்டத்துக்குப்  பின்னர் பிறந்துள்ளது. அவர்கள், தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வைத்தே, இந்தக் கொலை வழக்கு பற்றி தெரிந்து கொள்ளும் நிலை.
இப்படியான நிலையில்தான், குறிப்பிட்ட தமிழ் தினசரி பத்திரிகை, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர்தான் ‘கொலையாளிகள்’ என்று குறிப்பிட்டு வருகின்றது.
இந்த திட்டமிட்ட நடவடிக்கை,   தமிழகத்தில் தற்போதுள்ள இளை தலைமுறையினருக்கு இந்த மூவரையும் பற்றிய தவறான இமேஜ் ஒன்றை ஏற்படுத்தும்  பிரசார முயற்சி என்றே ஊகிக்கலாம்.
உண்மையில் ராஜிவ் காந்தி கொலை எப்படி திட்டமிடப்பட்டது, எப்படி நடந்தது, யார்யார் தொடர்புடையவர்கள் என்ற விபரங்களை, விறுவிறுப்பு.காமில், ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை என்ற தொடரில் விளக்கமாகக் கொடுத்து வருகிறோம்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால்  சிறிதாகக் கிளம்பியுள்ள ஆர்ப்பாட்டங்கள், தமிழகத்தின் மற்றைய பகுதிகளிலும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவே தெரிகின்றது
.

No comments:

Post a Comment